search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்- 600 கடைகள் அடைப்பு
    X

    ஆலங்குளத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்- 600 கடைகள் அடைப்பு

    • ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது.
    • சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.

    ஆலங்குளம்:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை-தென்காசி சாலை உள்ளது.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் கனரக வாகனங்கள், சிமெண்ட், காய்கறிகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகவும் இச்சாலை காணப்படுகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    மேலும் சிலை அமைக்க மாற்று இடம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து காமராஜர் சிலை அமைப்புக்குழு, வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடம் வழங்கக்கோரி இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று ஆலங்குளம் காய்கறி மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து வியாபாரிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது யூனியன் அலுவலகம் அருகே உள்ளிட்ட 3 இடங்களில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடமாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என சிலை அமைப்பு குழுவினர் கூறினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×