என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா அருகே 2 பேர் கொலையில் லாரி டிரைவர் சிக்கினார்- சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
    X

    வாலாஜா அருகே 2 பேர் கொலையில் லாரி டிரைவர் சிக்கினார்- சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் விசாரணை

    • கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • புத்தாண்டு அன்று ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (35) பைக் மெக்கானிக் மற்றும் லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரேமா. இவருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். வி.சி.மோட்டூர் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35) லாரி எலக்ட்ரிஷியன். இவரது மனைவி ரேகா.இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குழந்தைவேல் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று மாலை புத்தாண்டை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள லாரி மெக்கானிக் செட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைவேலுவை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்றார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைவேல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரவணன் தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இச்சம்பவம் குறித்து டி.எஸ்.பி பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் ஏதேனும் முன்விரோத காரணமாக கொலை நடந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடி உடைக்கபட்டு இருந்தது. அந்த லாரியை வாலாஜா போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

    கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் லாரி டிரைவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் இரட்டை கொலையில் துப்பு துலங்கியுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    புத்தாண்டு அன்று ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    Next Story
    ×