என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் நடை பயிற்சி சென்ற போது யானை மிதித்து தொழிலாளி படுகாயம்
- துரைராஜை விரட்டி வந்த யானை அவரின் அருகில் சென்று மிதித்தது.
- வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு 2-வது டிவிசனை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 59). தேயிலை தோட்ட தொழிலாளி.
துரைராஜ் இன்று காலை 6 மணியளவில் தனது எஸ்டேட்டில் இருந்து நல்லகாத்து சுங்கம் பாலம் வழியாக நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக யானை வந்தது. திடீரென யானை துரைராஜை விரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பயத்தில் ஓடினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். துரைராஜை விரட்டி வந்த யானை அவரின் அருகில் சென்று மிதித்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர்.
யானை மிதித்ததில் துரைராஜின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலது காலில் பலத்த காயம் இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்ததினர் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.