search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் என்ன பலன் கிடைக்கும்? கேஎஸ் அழகிரி
    X

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் என்ன பலன் கிடைக்கும்? கேஎஸ் அழகிரி

    • சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல.
    • ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பு...! பரவலாக பேசப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.

    அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் கிடைக்கப் போகும் பலன் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்து உள்ளார்கள் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    இந்திய சமூக அமைப்பு 5 ஆயிரம் ஆண்டுகளாக சமசீரற்ற முறையில் இருந்தது. ஒரு தரப்பு உயர் சாதி என்று அதிகார செருக்கில் இருந்தது.

    இன்னொரு தரப்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக யார் கண்ணிலும் படாமல் உரிமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அன்றைய சமூக அமைப்பில் அதை நியாயம் என்று கூறி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அவரவர் பிறந்த சமூகத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது ஈஸ்வரன் கொடுத்த வரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை அப்படித்தான் வாழ வேண்டும். அதையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனமான அநாகரீகமான, மானுடநெறி பிறழ்ந்த சமூக அமைப்பு இருக்க முடியாது.

    மிருகங்களுக்கு இடையே கூட இத்தகைய பாகுபாடு கிடையாது. பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இங்குதான் இருந்தது. வயதான கிழவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அவர் இறந்ததும் அவரது உடலோடு அந்த பெண்களையும் கட்டி வைத்து எரித்து விடுவார்கள். அந்த பெண் பத்தினியாகி விட்டார்.

    சிவலோக பதவி அடைந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வார்கள். இந்த காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்கத்தான் சீர்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் பாடுபட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மனித உணர்வுமிக்க சமூக நீதியை அவர்கள் நிலை நாட்டினார்கள்.

    அதேபோல்தான் இடஒதுக்கீடு முறையும். எல்லா சமூகங்களாலும் உடனடியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட முடியாது என்ற நிலை இருந்தது. அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறை தேவைப்பட்டது.

    நமது அரசியல் சட்டத்தை இயற்றிய போது இடஒதுக்கீட்டை தலைவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் இட ஒதுக்கீடு அவசியம் என்ற குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சேவலை வழங்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கோர்ட்டு சுட்டிக் காட்டியது. இதுதான் இடஒதுக்கீடு அவசியத்துக்கான பொறியாக அமைந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அவர் அதிகாரத்தில் இல்லாததால் அந்த குரல் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை.

    இந்த பிரச்சனை பெருந்தலைவர் காமராஜரின் காதுகளை எட்டியது. அவரும் அதன் நியாயத்தை உணர்ந்தார். பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயத்தை எடுத்து சொன்னார். இதனால் அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.

    அதை ஏற்றுக்கொண்ட நேரு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்தார். ஆனால் அப்போது எம்.பி.க்களாக அதிக அளவில் இருந்த உயர் சாதியினரும், இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டுள்ளது. அதில் உடனடியாக திருத்தம் தேவையா? என்றவர்களும் இருந்தார்கள். இதை உணர்ந்த நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் சமநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது அதற்கு சட்டத் திருத்தம் அவசியமாகிறது. எனவே உங்கள் மாநில எம்.பி.க்களை இந்த சட்டம் நிறைவேற வாக்களிக்க சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனால் அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறியது. இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தமும் அதுதான்.

    அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரும் தேவையை உணர்ந்து சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தார். சட்டப்படி இடஒதுக்கீடு கிடைத்தாலும் சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துல்லியமாக இல்லை என்ற குரல் எழுந்தது. அனைத்து தரப்பு மக்கள், ஏழைகள் கீழ் நிலையில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியவில்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல. சாதி ஒரு அடையாளம். அதுபோல் வாழ்க்கை கிடையாது. எந்த சாதியையும் ஆதிக்கம் செலுத்த ஜனநாயகம் அனுமதிக்காது.

    பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 63.14 சதவீதம் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு 27 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

    தமிழகத்திலும் இதே நிலைதான் இருக்கும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. சிலருக்கு உயர்சாதி என்பதால் கிடைப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கிடைக்கும். துல்லியமாக அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை. அதற்கு சாதிவாரியான புள்ளி விவரம் அவசியம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்ட பிறகு நாடு முழுவதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×