என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொசஸ்தலை-கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் சேதம் அடைந்ததால் 10 நாட்களாக போக்குவரத்து துண்டிப்பு
- மெய்யூர் ராஜாபாளையம்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்கு வரத்து முற்றிலும் தடைபட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் ராஜாபாளையம்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதனை மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மெய்யூர் ராஜபாளையம்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்தது.
இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்கு வரத்து முற்றிலும் தடைபட்டது. இந்த பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக கொண்டஞ்சேரி - சத்தரை இடையிலான தரைப்பாலம் துண்டானதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் மற்றும் சுற்றுவட்டார ஏரிகள் உபரி நீர் திறப்பால் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தரை-கொண்டஞ்சேரி இடையிலான தரைப்பாலம் துண்டானதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இறங்கி கடந்து வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு 7 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இருப்பதால் பொது மக்களும் ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி ஊருக்கு கடந்து சென்று வருகின்றனர். இதே நிலை கடந்த 2 வாரங்களாக நீடித்து வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே ராஜபாளையம்-மொண்ணமேடு, சத்தனா-கொண்டஞ்சேரி இடையேயான சேதம் அடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






