search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேகமலையில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
    X

    மேகமலையில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

    • குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை 8க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் புகுந்து அரிசியை தின்று அட்டகாசம் செய்தது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி போராடி யானையை பிடித்து பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பெரியாறில் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை மறு நாள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    இது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளி ஜோசப் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக அரிசி மற்றும் கோதுமையை எடுத்து தின்றுள்ளது. மேலும் தற்போது பொம்முராஜபுரம் செல்லும் பகுதியில் யானை முகாமிட்டுள்ளது.

    எனவே இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு வரை சுற்றுலா வாகனங்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேகமலை பகுதியில் உலாவி வரும் யானையால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அவசர ஆலோசனை நடத்தினர். யானையை கேரள வனப்பகுதிக்கள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×