search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் போலி முத்திரை தாள்களுடன் சிக்கிய கேரள வாலிபர்கள்
    X

    கம்பத்தில் போலி முத்திரை தாள்களுடன் சிக்கிய கேரள வாலிபர்கள்

    • கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது.
    • கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் தங்கதுரை, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் மெட்டு ரோடு 18-ம் கால்வாய் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு ஜீப்பை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்கள் போலியான 5000 ரூபாய் மதிப்புள்ள 4 முத்திரை தாள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

    ஜீப்பில் வந்த கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையை சேர்ந்த முகமதுசியாது(41), சிரட்டவேலி பகுதியை சேர்ந்த விபின்தாமஸ்(36) ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கம்பம் 15-வது வார்டு ஓடைக்காரத்தெருவில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் போலியான முத்திரை தாள்களை அச்சடித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த மேலும் சில போலி முத்திரை தாள்களை கைப்பற்றினர். இதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த முத்திரை தாள்கள் அச்சடிக்க பயன்படுத்திய மிசின், பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின், டோனர், ஸ்டெபிளேசர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலி முத்திரை தாள்களை போல கள்ளநோட்டுகள் தயாரித்தும் இவர்கள் புழக்கத்தில் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது. எனவே இந்த கும்பலுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? கள்ளநோட்டுகளை யார் யாருக்கு கொடுத்து புழக்கத்தில் விட வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×