search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் வழியாக மாவோயிஸ்டுகள் தப்பி செல்ல திட்டமா?
    X

    பர்கூர் வழியாக மாவோயிஸ்டுகள் தப்பி செல்ல திட்டமா?

    • போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது.
    • மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர்.

    அந்தியூர்:

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரட்டி உட்பிரிவு வரம்பு கரிகோட்டகரி அடுத்த அய்யன்குன்னு அருகே உறுப்பும்குட்டி பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கேரளா மாநில போலீசார், மாவோயிஸ்ட்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோடர் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர். அவர்களுடம் இருந்து 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் ரமேஷ், கேரளாவைச் சேர்ந்த சோமன் மற்றும் மனோஜ் ஆசிக் கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா என தெரிய வந்தது.

    இதையடுத்து தப்பி சென்ற மாவோயிஸ்ட்டுகளை பிடிக்க கேரளா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தப்பி சென்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இதனால் இரு மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வரட்டு பள்ளம் அணை அருகே வனத்துறை சோதனைசாவடியும், பர்கூர் அருகே ஒரு சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைசாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. போலீசாரும் சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பர்கூர் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தப்பி சென்ற மாவோயிஸ்டுகள் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    அதன்படி பர்கூர் சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு முழுவதும் சோதனையை தீவிர படுத்தி அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே அனுப்பி வைக்கிறார்கள்.

    மேலும் தலைமறைவான மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×