என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 45 கி.மீ.வேகத்தில் புயல் காற்று வீசும்
- மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும்.
- புயலின் தாக்கத்தால் இன்று முதல் நாளை வரை மணிக்கு சுமார் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.
வேலூர்
வங்கக் கடலில் உருவாகியுள்ள "மாண்டஸ்" புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும்.
புயலின் தாக்கத்தால் இன்று முதல் நாளை வரை மணிக்கு சுமார் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த கனமழையின் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உயர்மின்அழுத்த கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்கவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ மற்றும் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், பால்பொருட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் டார்ச் ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் புயல் கரையை கடந்த பின்பும், புயலின் தாக்கங்கள் குறையும் வரையிலும் மற்றும் அரசினால் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியிடும் வரையிலும் பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






