search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் வாலிபர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயன்ற 2 பேர் கைது

    • மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
    • இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    சின்னசேலம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அடுத்து பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந் தேதி இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.

    போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பள்ளி அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்தக் கலவரத்திற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி இளைஞர்கள் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக பள்ளி கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.

    இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாகண்டனூரை சேர்ந்த 2 வாலிபர்கள் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சின்னாக்கண்டனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) கட்டிட மேஸ்திரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (19). பிளஸ்-2 படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக கூலி வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். எந்த நேரமும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வந்தனர்.

    அப்போதுதான் கள்ளக்குறிச்சியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அறிந்து அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி தங்களது வாட்ஸ்அப் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பி சேலம் ரெயில்வே சந்திப்பில் ஒன்று கூடி அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

    இவர்களது இந்த வாட்ஸ்அப் தகவல் குறித்து கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கொடுமுடி போலீசார் ஸ்ரீதர் மற்றும் அசோக்கை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு தகவல் அனுப்பி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×