என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னிகுவிக் 112வது நினைவு தினம்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்
    X

    பென்னிகுவிக் 112வது நினைவு தினம்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

    • பென்னிகுவிக் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்பி சென்று தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
    • முல்லைப்பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று வரை தண்ணீர் கிடைத்து வருகிறது.

    கூடலூர்:

    இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன் சென்னை மாகாணத்தில் வைகை வடிநிலப்பரப்பில் பலமுறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    அப்போது சென்னை அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் செயலாளராக இருந்த ஜான்பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக கடலில் கலப்பதை பார்த்து ஒரு அணை கட்ட முடிவு முடிவு செய்தார்.

    இதுகுறித்து ஆங்கிலேயே அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1895-ம் ஆண்டில் அக்டோபர் 11ந்தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.

    ஆனால் இந்த தொகை போதவில்லை. அதன்பிறகு அடர்ந்த காடு, விஷ பூச்சிகள், காட்டு யானைகள், மிருகங்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி 3 ஆண்டுகளாக அணை பாதி கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு இந்த திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேயே அரசு மறுத்துவிட்டது.

    இதனால் பென்னிகுவிக் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்பி சென்று தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று வரை தண்ணீர் கிடைத்து வருகிறது.

    இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில் சகல வசதியுடன் மாளிகையில் வாழ்ந்த பென்னிகுவிக் குடும்பம் முல்லைப்பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்.

    மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்தனர். கடந்த 9.3.1911ஆம் ஆண்டு தேதி பென்னிகுவிக் காலமானார். அப்போது அவருடைய 5 மகள்களில் மூத்த மகளுக்கு 30 வயது. அவருடைய ஒரே மகனுக்கு 11 வயது.

    ஏழ்மை நிலையில் உறவினர்கள் யாரும் உதவாவதால் அவருடைய 3 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் வாரிசுகள் இல்லாமலேயே காலமானார்கள். ஒரு மகள் ஜெர்மனிக்கு சென்று அங்கு ஜெர்மானியரை திருமணம் செய்து கொண்டு நிரந்தரமாக குடியேறினார். அவருடைய ஒரே மகன் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார்.

    வெற்றிகரமாக பெரியாறு அணையை கட்டி முடித்த பென்னிகுவிக்கிற்கு சென்னை மாகாணா பொதுப்பணித்துறை செயலாளராக பதவி உயர்வு கொடுத்து அழகு செய்தது ஆங்கிலேயே அரசு. தொடர்ந்து சிறிது காலம் ராயல் இந்திய பொறியியல் கல்லூரி கடைசித்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார்.

    1889-ல் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராகவும் பதவி வகித்தார். 1899-ம் ஆண்டு பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுவிக்கிடம் ஆலோசனை கேட்டது.

    பென்னிகுவிக் மறைந்து இன்று 112-வது நினைவு தினம் தேனி மாவட்ட மக்களால் மிகவும் உருக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. இங்குள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அவரது சிலை முன்பு நின்று அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×