search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே கடும் போட்டி: தேவரின் தங்க கவசத்தை கலெக்டர்களிடம் ஒப்படைக்க முடிவு
    X

    எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே கடும் போட்டி: தேவரின் தங்க கவசத்தை கலெக்டர்களிடம் ஒப்படைக்க முடிவு

    • தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
    • வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    மதுரை:

    கடந்த 2014-ம் ஆண்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்.

    இந்த தங்க கவசத்தை ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவுக்கும் அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகிய 2 பேரும் கையெழுத்திட்டு மதுரை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துச் செல்வதும் பின்னர் விழா முடிந்ததும் வங்கியில் வந்து ஒப்படைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது தங்க கவசத்தை எடுப்பதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. அப்போது அ.தி.மு.க. பொருளாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் உரிமை கோரினார்‌. ஆனாலும் இருதரப்பினரும் வங்கியில் முற்றுகையிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக கலெக்டரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்துச் செல்லப்பட்டு தேவர் நினைவிடத்தில் பொருத்தப்பட்டது.

    இதன் பின்னர் கடந்த 2018 முதல் 2021 வரை ஓ.பன்னீர்செல்வமே தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வருகிறார். ஆனால் தற்போது மீண்டும் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிலும் தங்க கவசத்தை பெறுவதற்கு வங்கியில் கடிதம் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் பசும்பொன் நினைவிட காப்பாளர் டிரஸ்டி காந்தி மீனாளின் ஒப்புதல் கடிதமும் இந்த விஷயத்தில் தேவைப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பசும்பொனில் உள்ள காந்தி மீனாளை சந்தித்து ஒப்புதல் கடிதம் பெற முயற்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்குள்ள காந்தி மீனாள் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை கொடுத்தனர். பின்னர் தங்க கவசத்தை பெற எங்களுக்கு ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டனர். அப்போது காந்தி மீனாள் உறுதியளிக்காததால் முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் பசும்பொன்னில் இருந்து புறப்பட்டனர்.

    தங்க கவச விவகாரத்தில் காந்திமீனாள் அ.தி.மு.க.வில் எந்த தரப்பிற்கும் ஒப்புதல் கடிதம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினையில் வங்கி நிர்வாகமே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    டிரஸ்டி காந்தி மீனாள் ஒப்புதல் கடிதம் தராத பட்சத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது போலவே தேவரின் தங்க கவசத்தை கலெக்டர்களிடம் முறைப்படி ஒப்படைக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை நேரில் அழைத்து விளக்கவும் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    தங்க கவசம் மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில் வருகிற 25-ந்தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகிய 2 பேரும் வங்கிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் வசம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். பின்னர் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பொருத்தப்படும்.

    பின்னர் விழா முடிவடைந்ததும் மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்க கவசம் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் ஒப்படைக்கப்படும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×