என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே தொடர் மழை: கண்மாய் உடைந்து கிராமங்களில் புகுந்தது- சாலை துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு
- நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
- கடந்த வருடம் இதே போல் பெய்த பருவ மழையின் போதும் சாலை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள பூதமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள பளுவட்டான் கண்மாய் நிரம்பியது. அந்த பகுதியில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் நிரம்பிய கண்மாய் திடீரென உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இதனால் சாலை சேதமடைந்தது. மேலூரில் இருந்து தும்பை பட்டி, மாங்குளப்பட்டி, பூதமங்கலம் வழியாக சிங்கம்புணரி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த பகுதியைச் சேர்ந்த செவல்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, ஒத்தப்பட்டி, செவல்பட்டி ஆகிய 4 கிராமப் பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. தண்ணீர் தெருக்களையும் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்த கண்மாய் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.
கடந்த வருடம் இதே போல் பெய்த பருவ மழையின் போதும் சாலை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போதே கரையை மேம்படுத்தி தண்ணீர் செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை பொதுப்பணி துறையினர் செய்யவில்லை.
தற்போது பெய்த கனமழையின் காரணமாக மீண்டும் பளுவட்டான் கண்மாய் 2-வது முறையாக உடைந்துள்ளது. தகவல் அறிந்த பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன் சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி. மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.






