என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓமியோபதி பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
- திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
- ஓமியோபதி பயிற்சி கல்லூரி மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்:
தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி திருமங்கலத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் 52 மாணவர்கள் 4½ ஆண்டு கால மருத்துவ படிப்பை முடித்து ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும்.
பயிற்சி மருத்துவராக பணியில் இருப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அரசு ஓமியோபதி பயிற்சி கல்லூரி மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்க மறுக்கும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராட தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.






