என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு: தென்காசி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை
    X

    குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு: தென்காசி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை

    • சங்கரன்கோவில், சிவகிரி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.
    • கனமழையால் அவை கெட்டுவிடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லையில் நேற்று மாலை நேரத்தில் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, அம்பை ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரையிலும் கனமழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 75.8 மில்லிமீட்டரும், அம்பையில் 60 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 56 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாநகரிலும் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், கேடிசி நகர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் அணையின் நீர் இருப்பு 89.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர் இருப்பு 102.62 அடியாகவும் உள்ளது.

    அந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 693 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்திற்காக வினாடிக்கு 404 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சற்று அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை 48.25 அடியாக உள்ள நிலையில் 50 அடி கொண்ட வடக்கு பச்சையாறு அணை மட்டும் தொடர்ந்து 9 அடியாகவே நீடித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த நிலையில் நேற்றும் மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் இரவு முழுவதும் நீடித்த மழையால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் தடை செய்யப்பட்டது. செங்கோட்டையில் 62 மில்லிமீட்டரும், தென்காசியில் 48.5 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கடனா அணை பகுதியில் 58 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணை நீர்மட்டம் 3 அடி அதிகரித்து 69.50 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி அதிகரித்து 70 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் நேற்று 56 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 58.07 அடியானது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் 111 அடியாகவும், குண்டாறு அணை 30.50 அடியாகவும் நீடிக்கிறது. தொடர்மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 92 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. கோவில்பட்டி, எட்டயபுரம், வேடநத்தம், சூரன்குடியில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    புதியம்புத்தூரில் 10 நாட்களாக பெய்து வரும் மழையால் மானாவாரி பயிர்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவை வளர்ச்சியின்றி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அங்கு உளுந்து, பாசிப்பயறு, கம்பு உள்ளிட்டவை விதைக்கப்பட்டிருக்கும் நிலையில் கனமழையால் அவை கெட்டுவிடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×