search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை- வாய்க்கால் கரை உடைந்து விவசாய தோட்டத்தில் தண்ணீர் புகுந்தது
    X

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை- வாய்க்கால் கரை உடைந்து விவசாய தோட்டத்தில் தண்ணீர் புகுந்தது

    • கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • கூகலூர் கிளை வாய்க்காலில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், புதுக்கரை புதூர் தொட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

    இதனால் அந்த பகுதிகளில் உள்ள வாய்க்கால் தண்ணீர் நிரம்பி வழிந்து செல்கிறது. இதே போல் மழை காரணமாக கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள புதுக்கரை புதூரில் அந்தியூர் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது.

    நெல் அறுவடை பணிகளுக்காக தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாலம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தடப்பள்ளி கிளை வாய்க்கால் பாலம் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோபி மையப்பகுதியில் கீரி பள்ளம் ஓடை வழியாக தடப்பள்ளி கிளை வாய்க்காலில் மழை நீர் தேங்கி வாய்க்கால் நிரம்பி மழை நீர் கரைபுரண்டு ஓடியதால் விவசாய நிலங்களுக்கு மழைநீர் புகுந்தது.

    இதையொட்டி புதுக்கரை புதூர் பகுதி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்றதால் வாய்க்காலையொட்டி உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

    அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வாழை மற்றும் கரும்புகள் பயிரிடப்பட்டு இருந்தன. அந்த தோட்டங்களில் வாய்க்கால் தண்ணீர் புகுந்தது. இதனால் வாழை மற்றும் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதே போல் தொட்டிபாளையம் பகுதி கூகலூர் கிளை வாய்க்காலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் அந்த கிளை வாய்க்காலின் கரை உடைந்தது. இதையொட்டி வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகே இருந்த வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது.

    இது குறித்து புதுக்கரை புதூர் விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை வைத்து அடைக்கப்பட்டிருந்த பாலத்தை உடனடியாக சரி செய்தனர்.

    இதே போல் பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக எலந்தகுட்டை மேடு பகுதியில் 61.2 மி.மீட்டர் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-9, கோபி செட்டிபாளையம்-50.50, தாளவாடி-6.5, சத்திய மங்கலம்-58, பவானி சாகர்-24, பவானி-7.6, சென்னிமலை-12, கவுந்தப் பாடி-22.6, எலந்தகுட்ை மேடு-61.2, அம்மா பேட்டை-14, கொடிவேரி 24.2. குண்டேரி பள்ளம் 19.2, வட்டுப்பள்ளம்-44.2 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 334.4 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    Next Story
    ×