search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டித்தீர்த்த கனமழை- சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
    X

    கொட்டித்தீர்த்த கனமழை- சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்றிரவும் கனமழை பெய்தது.
    • குறிப்பாக மேட்டூர், எடப்பாடி, கரியகோவில் ஆகிய பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு 10 மணி வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.‌ இதன் காரணமாக மதுரையில் அனைத்து இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், தெற்கு வாசல், வில்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    மதுரை அண்ணாநகரில், தனியார் மகளிர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதில் விடுதியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    அப்போது அறையில் தங்கி இருந்த 2 கல்லூரி மாணவிகள், ஒரு இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்றிரவும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூர், எடப்பாடி, கரியகோவில் ஆகிய பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ராசிபுரம் தாலுகாவில் தொடர் மழை காரணமாக வெண்ணந்தூர் அருகேயுள்ள ராசாபாளையம் மற்றும் சர்க்கார் தோப்பு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று இரவும் அண்ணா மடுவு பெரியேரி நிரம்பி உபரி நீர் அதிகளவு வெளியேறி வருகிறது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள நேரு நகர், கண்ணப்பன் வீதி, பஸ் நிலையம் பகுதி, பவானி ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் குளம் எதிரே ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பூரில் பெய்த தொடர் மழை காரணமாக சுத்திகரிப்பு நிலைய கட்டுமான இடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டிடம் மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி நீர் நேற்று வெளியேற்றப்பட்டன. தமிழக காவிரி எல்லை பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார, பல்வேறு மலைப் பகுதிகளில் பெய்த மழையால் காற்றாற்று வெள்ளம் உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன. மேலும் இந்த நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டு இந்த தடை தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருகிறது.

    சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி பகுதியில் படகுத்துறை அருகே காவிரி ஆற்றின் கரையை ஒட்டி நடை மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இன்று அதிகாலை, சுமார் 150 அடி தூரத்திற்கு நடைமேடை திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

    Next Story
    ×