என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர், பந்தலூரில் கனமழை- ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- இருவயல், தொரப்பள்ளி ஆகிய பழங்குடியின கிராமங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
- 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வருகிறது.
கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேவர் சோலை, தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் அங்கு கனமழை கொட்டியது.
இதனால் ஒற்றவயல், குற்றிமுற்றி, கம்மாத்தி, புத்தூர்வயல், தொரப்பள்ளி வழியாக மாயாற்றுக்கு செல்லும் ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இருவயல், தொரப்பள்ளி ஆகிய பழங்குடியின கிராமங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
மழை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம், ஆகாச பாலம் பகுதியில் ராட்சத கற்கள் சாலையில் உருண்டு விழுந்தது. இதன் காரணமாக கூடலூர்-ஊட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும், வருவாய்த்துறையினரும் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது.






