search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 4-வது நாளாக கூலி உயர்வு கேட்டு சுமைதூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
    X

    ஈரோட்டில் 4-வது நாளாக கூலி உயர்வு கேட்டு சுமைதூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    • சுமை தூக்கும் பணியில் 7,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சுமை தூக்கும் தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் சாலை, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    இங்கிருந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டுத் தீவனம், பேப்பர், அட்டை, போர்டு உட்பட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சுமை தூக்கும் பணியில் 7,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உடன் அனைத்து தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் செய்து 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு, பிற சலுகைகள் பெறும் நிலையில் கடந்த 6 ஆண்டாக கூலி உயர்த்தப்படவில்லை.

    இதனால் 41 சதவீத கூலி உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் லோடு ஏற்ற இரவு சாப்பாட்டுக்கு 75 ரூபாய் உள்ளிட்ட சலுகைகள் வழங்கவும், அதற்கான ஒப்பந்தம் செய்யவும் கோரி கடந்த 13-ந்தேதி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    இப்போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து பிற நகரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், இங்கு வந்த சரக்கை இறக்க முடியாமல் 4 நாட்களில் ரூ.400 கோடி மதிப்புள்ள மஞ்சள், ஜவுளி போன்ற பொருட்கள் குடோனில் தேக்கம் அடைந்துள்ளது.

    இதனால் லாரி உரிமையாளர்கள் பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×