search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில் பயிற்சி அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் நாளை விரிவான விசாரணை
    X

    கோவில்களில் பயிற்சி அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் நாளை விரிவான விசாரணை

    • அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது.
    • தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

    இதற்கிடையே புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும். மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோவில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு அரசின் அரசாணை சட்டவிரோதமானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்களில் இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

    பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகநாதன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அனுபவ பயிற்சிதான். இது தொடர்பான விரிவான விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர்.

    அரசு தரப்பு வாதத்திற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் இந்த அரசாணை அமல்படுத்தும் வேலையை அரசு நிறைவேற்றி விடும் என்பதால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்கக்கூடாது என தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×