என் மலர்
உள்ளூர் செய்திகள்

துபாய்-அபுதாபியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: 2 பேர் கைது
- துபாயில் இருந்து பயணிகள் விமானம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
- சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.30.5 லட்சம் மதிப்புடைய 690 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் அபுதாபியில் இருந்து பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சிவகங்கையை சேர்ந்த பழனி முருகன் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதித்தனர்.
அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 685 கிராம் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






