என் மலர்
உள்ளூர் செய்திகள்

குர்பாணியின் போது துள்ளிக்குதித்த ஆடு மின் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு
- திண்டுக்கல் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது.
- வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை வெட்ட தயார் நிலையில் வைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக துள்ளிக்குதித்து ஓடியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் இன்று பக்ரீத் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் சிறப்பாக பல்வேறு இடங்களில் ஆடு, மாடு ஆகியவை குர்பாணி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
பலர் வீடுகளிலேயே ஆடுகளை வாங்கி வளர்த்து அதன் இறைச்சியை வெட்டி 3 பகுதிகளாக பிரித்தனர். ஒரு பகுதியை உறவினர்களுக்கும், 2ம் பகுதியை இயலாதவர்களுக்கும் வழங்கி விட்டு மீதமுள்ள பகுதியை தங்கள் வீட்டுக்கு பயன்படுத்தி கொள்வதே குர்பாணி எனப்படுகிறது.
திண்டுக்கல் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை வெட்ட தயார் நிலையில் வைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக துள்ளிக்குதித்து ஓடியது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தில் ஆடு சிக்கியதால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
மின் கம்பியில் சிக்கிய ஆட்டின் 4 கால்களும் கருகி உயிருக்கு போராடியது. உடனடியாக ஏணியை வைத்து ஆட்டை குச்சி மூலம் கீழே தள்ளினர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் எம்.கே.எஸ். நகரில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.






