என் மலர்
உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அருகே வேன் மரத்தில் மோதி 3 வயது சிறுமி பலி
- விபத்தில் சிக்கி பலியான சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- புத்தாண்டில் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சென்னபட்டி, முரளி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மகாஸ்ரீ (3) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் சம்பத்குமார் தனது உறவினர்களுடன் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.
அதன்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் சம்பத்குமார் தனது மகள், மனைவி, உறவினர்களுடன் ஒரு வாடகை வேனில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிளம்பி சென்றார். வேனை சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த கவுதம் (27) என்பவர் ஓட்டினார்.
வேன் முரளி பிரிவு என்ற இடம் அருகே இன்று அதிகாலை 4.45 மணி அளவில் வந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலை ஓரமாக இருந்த ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிறுமி மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வேனில் பயணம் செய்த சம்பத்குமார் அவரது மனைவி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கும், வெள்ளி திருப்பூர் போலீசருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் சிக்கி பலியான சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டில் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






