என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே போராட்டத்தின் போது தொழிற்சாலை ஊழியர்கள் மீது தாக்குதல்
- திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரிந்த 178 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தனியார் தொழிற்சாலை முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சிலர் தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ கண்ணன், தினேஷ்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






