என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அருகே புயல் மழையில் 1 லட்சம் வாழைகள் சாய்ந்து நாசம்- விவசாயிகள் கண்ணீர்
    X

    ஆரணி அருகே புயல் மழையில் 1 லட்சம் வாழைகள் சாய்ந்து நாசம்- விவசாயிகள் கண்ணீர்

    • மஞ்சள், ரஸ்தாளி, கற்பூரம், செவ்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளது.
    • புயலால் சேதம் அடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு, சந்தவாசல், வலாங்காடு, கொட்டாமேடு, வெள்ளூர், சின்ன புஷ்பகிரி உள்ளிட்ட இடங்களில் 500 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர்.

    இதில் மஞ்சள், ரஸ்தாளி, கற்பூரம், செவ்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. வாழை மரங்கள் குலை தள்ளி இன்னும் சிறிது நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக இந்த பகுதியில் நேற்று மாலை முதல் விடிய, விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1 லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இன்று காலை வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை கண்ட விவசாயிகள் கண்ணீர் சிந்தினர்.

    ஏற்கனவே வாழை பயிரிடுவதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.50,000 வரை வங்கியில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்து இருந்ததாகவும், புயல் காரணமாக வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ரூ.50 லட்சம் வரை சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    புயலால் சேதம் அடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×