என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இன்று காலை இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

    • குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர்.
    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேப்போல் இன்றும் கருங்கல்பாளையம் மற்றும் கிருஷ்ணன்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இந்நிலையில் பொது மக்களுக்கு தரமான இறைச்சிகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன், மற்றும் சுகாதார அலுவலர்கள் இன்று அதிரடியாக கருங்கல்பாளையம் மற்றும் கிருஷ்ணன் பாளையம் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளுக்கு சென்று சோதனை மேற் கொண்டனர்.

    ஒவ்வொரு இறைச்சிக்கடையாக சென்று இறைச்சிகளை தனித்தனியாக சோதனையிட்டனர். மேலும் இறைச்சிக்கூடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சில இறைச்சி கடைகளில் இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்கு வைத்திருந்ததை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

    இவ்வாறாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் இறைச்சிக்கடை காரர்களிடம் அறிவுரைகள் வழங்கினர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×