என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு சூரம்பட்டியில் கோழியை கடித்துக்கொன்ற நாயை அடித்த வாலிபர் கைது
- தினேஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
- பெண் சூரம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பாரதிநகரை சேர்ந்த பெண் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வந்துள்ளார். அந்த பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த தெரு நாய்களில் ஒன்று தினேஷ் வளர்க்கும் ஒரு கோழியை கடித்து கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் சம்பவத்தன்று கட்டையால் தெருவில் சுற்றி திரியும் ஒரு தெரு நாயை தாக்கியுள்ளார். இதனை எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதனையும் இந்த பெண் வீட்டார் வீடியோவாக எடுத்தனர். அப்போது தினேசுடன் இருக்கும் நபர் கட்டையை வாங்கி ஒரு தெரு நாய் தாக்கியுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து அந்த பெண் சூரம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் மீது மிருகவதை தடை சட்டம், கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தையால் பேசியது உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.






