search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு- நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு- நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்

    • வெயிலின் தாக்கம் காரணமாக சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. 10-ந் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்கு சேகரித்தனர். இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

    இதேப்போல் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்கினை ஏற்கனவே பதிவு செய்து விட்டனர். இதேப்போல் போலீசாரும் தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தப்பட்டு இருக்கும். 77 பேர் போட்டியிடுவதால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. இந்த 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 80 வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தலாம். ஆனால் இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுவதால் 78-வதாக நோட்டா பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தேர்தலில் 1,190 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள். வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 238 எந்திரங்கள் ( வி.வி. பேட்), 238 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட்) பயன்படுத்தப்படுகிறது.

    நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பதிவான வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

    காலை 9 மணி நிலவரப்படி முதல் 2 மணி நேரத்தில் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    காலை 11 மணி நேர நிலவரப்படி 27.89 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். இது 44.56 சதவீதம் ஆகும்.

    வெயிலின் தாக்கம் காரணமாக சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் உடன் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசாரும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பதட்டமான வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினை சி.சி.டி.வி. கேமரா பொருத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி, சென்னையில் இருந்து தமிழக தேர்தல் அதிகாரி, டெல்லியில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டது. 238 வாக்கு சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவுனை கண்காணித்தனர். தேர்தலில் வாக்களிக்கும் வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும் நான்கு புறமும் 200 மீட்டர் தூரத்தில் அரசியல் கட்சியினர் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது.

    மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர்.

    முதன் முதலில் தேர்தலில் வாக்களிக்க ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதேப்போல் இளைஞர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    வாக்களிக்க வந்த பொது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அந்தந்த நிலைய அலுவலர்கள் விளக்கம் அளித்து அவர்கள் வாக்களிக்க உதவினர்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு செல்லப்படும்.

    அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்படும். அந்த அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பாளர்கள் முகவர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும்.

    அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும். 77 பேர் போட்டியிடுவதால் 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    Next Story
    ×