என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் கரகாட்டம் ஆடிய பெண்கள்.
ஆடல்-பாடல், கரகாட்டத்துடன் களை கட்டிய தேர்தல் களம்
- தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் தற்போது களை கட்ட தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது.
- பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் திருவிழா போல் காட்சி அளித்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் வகையில் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தேர்தல் நாள் நெருங்க... நெருங்க... அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.
இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் எந்த பகுதியில் பார்த்தாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம்.. கூட்டமாக சுற்றி வருகிறார்கள். பெரும்பாலும் தெருக்களில் வாக்காளர்களை கவர கட்சியினர் பம்பரம் போல் சுழன்றி வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளித்து வருகிறது. இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள்.
பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் அவரது பழைய பாடல்களை பாடி நடித்து காட்டுகிறார்கள்.
மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறார்கள்.
மேலும் தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து கொள்கிறார்கள். மேலும் பலர் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றி வருகிறார்கள். பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள். பிரசாரத்துக்கு வரும் தொண்டர்கள் பலர் மொட்டை அடித்து கட்சி சின்னங்களை சிகை அலங்காரம் செய்தும் வருகிறார்கள்.
மேலும் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடி வருகிறார்கள். நேற்று மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் திருவிழா போல் காட்சி அளித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் தற்போது களை கட்ட தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது.






