search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமரின் பிரசார வசதிக்கேற்ப தேர்தல் ஆணையம் தேதியை தீர்மானம் செய்கிறது- முத்தரசன்
    X

    பிரதமரின் பிரசார வசதிக்கேற்ப தேர்தல் ஆணையம் தேதியை தீர்மானம் செய்கிறது- முத்தரசன்

    • 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது.
    • குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும்.

    விருதுநகர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதியை தீர்மானிப்பது யார்? தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தீர்மானிக்க வேண்டும். பிரதமரின் பிரசார வசதிக்கேற்ப தேர்தல் தேதி தீர்மானிக்கப்படுகிறது. சுதந்திரமான செயல்பாட்டை அது இழந்து விட்டது. உத்தரவுக்காக காத்திருந்து உத்தரவை அமல்படுத்துகிற அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.


    ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வாக்கு பெட்டியை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஆட்களை நியமிக்க வேண்டி இருக்கிறது. எட்டு மணி நேரத்திற்கு ஒரு ஆள் என்றால் ஒரு நாளைக்கு 3 பேர் வரை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஆகும் செலவை தேர்தல் ஆணையம் தான் ஏற்க வேண்டும் என்றார்.

    பின்னர் முத்தரசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: ஒரு மாநில கட்சியான தி.மு.க. தேர்தல் பத்திரத்தில் இவ்வளவு நிதி எப்படி என அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

    பதில்: அண்ணாமலை, மல்லாந்து படுத்துக்கொண்டு காரி துப்புகிறார். ஒரு கம்பெனி தொடர்ந்து 3 வருடங்கள் லாபத்தில் இயங்கினால் அதில் ஏழு சதவீதம் மட்டும் தான் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதியை மாற்றியது மோடியா? மு.க ஸ்டாலினா? ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை வாங்கலாம் என திருத்தம் கொண்டு வந்தது மோடியா, மு.க.ஸ்டாலினா? ரகசியமாக தேர்தல் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்தது யார்? மோடியா மு.க.ஸ்டாலினா? இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து வித்திட்டவர் மோடி.


    அவகாசம் கேட்ட ஸ்டேட் வங்கி, உச்சநீதி மன்றம் எச்சரிக்கை விடுத்ததும் உடனடியாக தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது எப்படி? 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது. அதை சட்டரீதியாக கொண்டு வந்ததும் மோடி கட்சி தான். ஏழைகளுக்கு வரி மேல் வரி விதிக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டது. இந்த சலுகைக்கான கைமாறாக பெற்றது தான் தேர்தல் பத்திரங்கள். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றிருந்தனர். ஆனால், வட்டியும் செலுத்தவில்லை. அசலையும் செலுத்த வில்லை. பின்பு, வராக்கடன் எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள்.

    கேள்வி: போதை பொருள் பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?

    பதில்: எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குஜராத்திற்கு தான் பிரச்சினை வரும். குஜராத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. யாரோ ஒருவர் ஜாபர் சாதிக் மாட்டிக் கொண்டார். அவர் சில காலம் தி.மு.க.வுடன் இருந்தார் என்பதாலேயே மட்டுமே தி.மு.க. மீது பழி போட முடியாது.

    2013-ல் இதே ஜாபர் சாதிக்கை பிடித்தனர், அப்போது இருந்தது யார் ஆட்சி? பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியா நடைபெற்றது, ஏன் அவரை அப்பொழுது விட்டார்கள்?

    குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும். அமலாக்கதுறையை வைத்து மிரட்டி மற்றவர்களை களங்கப்படுத்தி அதன் மூலம் பலன் பெற மோடி நினைக்கிறார்.

    பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுவார்கள்.

    கேள்வி: சமையல் எரி வாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு பற்றி?

    பதில்: வீட்டில் உபயோகிக்க கூடிய சிலிண்டரின் விலை 2014-ல் நானூறு ரூபாயாக இருந்தது. அது 1200 வரை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை ஏறும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது எனக் கூறினார். ஆனால் தற்பொழுது விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுகின்றனர். விலை ஏறியதற்கு சம்பந்தமில்லை எனக் கூறும் இவர்கள், தற்பொழுது மட்டும் விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுவது எப்படி?

    கேள்வி: கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறதே?

    பதில்: கருத்துக்கணிப்புகள், கிளி சோசியம் சொல்பவர், கைரேகை பார்ப்பவர், ஜாதகம் பார்ப்போர் என அனைவரும் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் எது சரி? எது தவறு? எனத தேர்தல் தீர்மானிக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது உண்மை தெரியும். மக்கள் மோடியின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கி றார்கள். மோடிக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, தேசியக்குழு உறுப்பினர் டி.ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டி, நகர செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×