search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராக்கெட் பட்டாசு விழுந்து குடிசைவீடு தீ பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலி
    X

    ராக்கெட் பட்டாசு விழுந்து குடிசைவீடு தீ பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலி

    • திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சேர்ந்த சங்கர் என்பவரின் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்தது.
    • தீ அருகில் இருந்த 3 குடிசைகளுக்கும் பரவியது. இதில் 3 குடிசைகளும் எரிந்து நாசமானது.

    திருவெற்றியூர்:

    திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). மாடியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதியில் நேற்று காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. காலை 11 மணி அளவில் திடீரென்று ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் பறந்து வந்து மல்லிகாவின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென் பரவி குடிசை முழுவதும் பற்றி எரிந்தது. மல்லிகாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக்கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீழ் வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் சேகர் உடனடியாக மேலே சென்று மல்லிகாவை மீட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டி மல்லிகாவின் உடல் முழுவதும் கருகியது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ பாத்திரங்கள் போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    உயிருக்கு போராடிய மல்லிகாவை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதேபோல் அன்னை சிவகாமி நகரில் சுந்தரி, மணி உட்பட 6 பேரின் வீடுகளில் பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை கே.பி. சங்கர் எம்.எல்.ஏ, திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், கவுன்சிலர் திரவியம் வட சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் வி. தியாகராஜன் ஆகியோர் தீயை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

    வருவாய்த்துறையினர் திருவொற்றியூர் தாசில்தார் அருள் தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்து 6 வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 5 கிலோ அரிசி வழங்கினர்.

    இதேபோல் அ.தி.மு.க சார்பில் அன்னை சிவகாமி நகரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2ஆயிரம் ரொக்கப் பணம் அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை முன்னாள் எம்.எல்.ஏ.கே. குப்பன் வழங்கினார்.

    திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சேர்ந்த சங்கர் என்பவரின் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 3 குடிசைகளுக்கும் பரவியது. இதில் 3 குடிசைகளும் எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். திருவொற்றியூர் பகுதியில் மட்டும் 10 குடிசை வீடுகள் எரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×