search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் அதிபர் கொன்று எரிப்பு:  ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம்-  டிரைவர் வாக்குமூலம்
    X

    தொழில் அதிபர் கொன்று எரிப்பு: ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம்- டிரைவர் வாக்குமூலம்

    • பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்.
    • அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.

    விளாத்திகுளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது48). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் அவரது சகோதரர் குழந்தைக்கனி, உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி 4 பேரை கைது செய்து குளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:-

    எனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஆனால் என்னிடம் அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் நாகஜோதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    சம்பவத்தன்று காலை நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் எனக்கு ஒருவர் பணம் வரவேண்டியுள்ளது என்றும், என்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்து வந்தேன். பின்னர் நாகஜோதியை விளாத்திகுளம் அழைத்து வந்தேன். சூரங்குடியில் எனது சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்றேன்.

    சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

    பின்னர் நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்து கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி காருடன் நாகஜோதியை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×