என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டீசல் விலை அதிகரிப்பு- காசிமேடு துறைமுகத்தில் 70 சதவீத படகுகள் கடலுக்குள் செல்லவில்லை
    X

    டீசல் விலை அதிகரிப்பு- காசிமேடு துறைமுகத்தில் 70 சதவீத படகுகள் கடலுக்குள் செல்லவில்லை

    • மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒரு முறை சென்று வர ரூ. 5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தேவைப்படுகிறது.
    • தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்களில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக 30 சதவீத விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன. 70 சதவீத விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடிப்பது வழக்கம். இதற்கு 6500 முதல் 8000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒரு முறை சென்று வர ரூ. 5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தேவைப்படுகிறது.

    தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்களில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    இதனால் விசைப்படகு மீனவர்கள் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். எனவே மானிய டீசலை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    தற்போது குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்குள் செல்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலையும் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் என்பவர் கூறியதாவது:-

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடுமையான டீசல் விலை ஏற்றத்தினால் தொடர்ந்து இந்த மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

    மீன்பிடி தொழில் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காசிமேடு மீனவர்கள் கூறும்போது, சிறிய வகை மீன்களே வலைகளில் சிக்குவதால் பெரிய வருமானம் ஈட்ட முடியாத நிலை உள்ளது. குறைந்த விலைக்கு இந்த சிறிய வகை மீன்களை ஆந்திராவில் உள்ள இறால் பண்ணைக்கும் சென்னையை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் உள்ள கோழி பண்ணைக்கு தீவனத்துக்காக அனுப்பி வருகிறோம்.

    ஆகஸ்ட், செப்டம்பர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலுக்குள் செல்ல முடியாமல் உள்ளோம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×