என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்து அமைப்பினர் ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி மறுப்பு: ஏராளமான போலீசார் குவிப்பு-பரபரப்பு
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
- கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990 அக்டோபர் மாதம் 10-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராமஜோதி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சங்கர், பாபு, நரசிம்மய்யா, ராஜா ஆகிய 4 பேர் பலியாகினர்.
அவர்களின் நினைவாக, தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் 4 ரோடு அருகே, நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந்தேதி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியையொட்டி இன்று 33-ம் ஆண்டாக ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர் தேன்கனிக்கோட்டை போலீசாரிடம் முன் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவு நாளையொட்டி தேன்கனிக்கோட்டையில் இன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், இந்து அமைப்பினர் தடையை மீறி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்கவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
அதனை போலீசார் தடுத்து நிறுத்தி மேடைகளை உடனே அகற்றுமாறு கூறினர். அந்த பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






