search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்- விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை
    X

    மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்- விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை

    • மின்வாரிய அதிகாரிகள் யாரும் இதுபோன்ற மிரட்டும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை.
    • வடமாநில மோசடி கும்பல் தொடர்ச்சியாக இதுபோன்ற கைவரிசை காட்டி வருகிறது.

    நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லையா? உங்கள் மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்படும் என்கிற குறுஞ்செய்தி உங்கள் செல்போனுக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறதா? அதை கண்டு பீதி அடையாதீர்கள்.

    மின்வாரிய அதிகாரிகள் யாரும் இதுபோன்ற மிரட்டும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை. இதுபோன்ற நேரங்களில் பதட்டமடையும் சிலர் எந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததோ?

    அதற்கு போன் செய்து நாங்கள் தான் மின் கட்டணம் செலுத்தி விட்டோமே... என்று கேட்டு விட்டால் போதும்... எதிர் முனையில் பேசுபவன் உங்களை ஏமாற்றுவதற்கு கெட்டியாக பிடித்துக் கொள்வான்.

    உங்களது பில் இன்னும் 'அப்டேட்' ஆகவில்லை. நாங்கள் சொல்லும் செயலிக்கு சென்று மின் கட்டணம் செலுத்திய விவரங்களை பதிவிடுங்கள் என்று கூறுவார்கள். தாங்கள் ஏமாற்றப்படப் போகிறோம் என தெரியாமல் அப்பாவி மக்கள் குறிப்பிட்ட செயலிக்குள் சென்றுவிட்டால் போதும்.

    அதில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகிறார்கள். வடமாநில மோசடி கும்பல் தொடர்ச்சியாக இதுபோன்ற கைவரிசை காட்டி வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் இது போன்ற மோசடி நபரிடம் சிக்கி கடைசி நேரத்தில் உஷாராகி தப்பியுள்ளார். இதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் பொது மக்களை குறிவைத்து மின் கட்டண குறுஞ்செய்திகளை போலியாக அனுப்பி பணத்தை பறித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும் போது, 'மின்வாரியத்தில் குறியீடு இடம்பெற்றிருக்கும். ஆனால் மோசடி ஆசாமிகள் அனுப்பும் போலியான குறுஞ்செய்திகளில் நம்பர் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

    இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரியத்துக்கு சென்று கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். உடனடியாக பதட்டத்தில் குறுஞ்செய்தி வந்த போனுக்கு தொடர்பு கொண்டு பேசி ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    இதுபோன்ற மோசடி நபர்கள் ஒரு முறை பயன்படுத்தும் மோசடி செயலியை மறுமுறை பயன் படுத்துவதில்லை. இதனால் ஏமாற்றி பணத்தை சுருட்டியது யார்? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

    எனவே மக்கள் உஷாராக இருந்து பணத்தை இழக்காமல் இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதே சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரையாக உள்ளது.

    Next Story
    ×