என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு சோலாரில் செயல்பட்ட போலி வங்கியில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற குற்றப்பிரிவு போலீசார்

    • ஈரோடு சோலார் பகுதியில் செயல்பட்டு வந்த போலி வங்கியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
    • வங்கி சோலார் பகுதியில் கடந்த 2 மாதமாக செயல்பட்டு வந்ததும், இந்த வங்கியில் 8 பேர் மட்டுமே சேமிப்பு கணக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை, ஈரோடு உள்பட 8 இடங்களில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் ஒரு வங்கி செயல்பட்டு வந்தது. இந்த வங்கி குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த வங்கி போலியானது என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வங்கியின் உரிமையாளர் சந்திரபோஸ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு சோலார் பகுதியில் செயல்பட்டு வந்த போலி வங்கியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் இருந்து நேற்று காலை போலீசார் வந்தனர்.

    அவர்கள் காலையில் இருந்து மாலை வரை வங்கியில் சோதனை நடத்தினர். அப்போது இந்த வங்கி சோலார் பகுதியில் கடந்த 2 மாதமாக செயல்பட்டு வந்ததும், இந்த வங்கியில் 8 பேர் மட்டுமே சேமிப்பு கணக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் போலி வங்கியில் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், செக் புத்தகங்கள், பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர். மேலும் இந்த வங்கி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதும் தெரிய வந்தது. நேற்று போலீசார் வந்ததை தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே போலி வங்கியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டது.

    Next Story
    ×