என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் மோதல்- கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு
- அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.
- ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு உடன் படிக்கும் நண்பர்களுடன் மின்சார ரெயிலில் சென்றார். மின்சார ரெயில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் நின்றபோது அங்கிருந்த சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கும், தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பல மாணவர்களும் காயம் அடைந்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 12 தையல் போடப்பட்டது.
தாக்குதலின் போது ரெயில் நிலையத்தில் மாணவர்கள் விட்டுச்சென்ற கத்தி, அரிவாளை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 10 பேர் மீது திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அவர்களை அடையாளம் காண கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






