search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் காலியாக உள்ள 13 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு

    • அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடுபட்ட காலியிடங்களில் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் காலியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

    மாவட்டத்தில் மொத்தம் 7 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் களக்காடு யூனியன் படலையார்குளம், மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி, பாளை யூனியன் கீழப்பாட்டம், பாப்பாக்குடி யூனியன் திருப்புடைமருதூர், வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

    இந்நிலையில் அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி யூனியன், உமரிக்கோட்டை, செய்துங்கநல்லூர், பராக்கிரமபாண்டி, பிச்சிவிளை, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து, பிடாநேரி, கோமாநேரி, சுரைக்காய்பட்டி, சிதம்பரபட்டி, ஜெகவீரபாண்டியபுரம், ஜமீன் கோடாங்கிபட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, மாதலாபுரம் ஆகிய பகுதிகளில் 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிச்சிவிளை ஊராட்சி 6-வது வார்டில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து அகரம், குறிப்பன்குளம், வெள்ளானகோட்டை ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 பேரும், மறவன்மடம் பஞ்சாயத்து 2-வது வார்டு, முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து 8-வது வார்டு, பிச்சிவிளை பஞ்சாயத்து 2-வது வார்டு, 3-வது வார்டு, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 9-வது வார்டு, வெள்ளாளன்விளை பஞ்சாயத்து 1-வது வார்டு, சந்திரகிரி பஞ்சாயத்து 6-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பதிவாகும் வாக்குகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 550 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதனையொட்டி மேலப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    Next Story
    ×