என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு: மாணவ-மாணவிகள் 1.21 லட்சம் பேர் முன்பதிவு
    X

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு: மாணவ-மாணவிகள் 1.21 லட்சம் பேர் முன்பதிவு

    • தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
    • குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது.

    "தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23"-ஐ நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உள்பட ரூ.47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சர் முதல் கையெழுத்திட்டார்.

    அதன்படி www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து 1,21,686 முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன.

    தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும்.

    இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும்.

    எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×