search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் அருகே பஸ்-ஆட்டோ மோதி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 3 பேர் பலி
    X

    திருப்பத்தூர் அருகே பஸ்-ஆட்டோ மோதி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 3 பேர் பலி

    • மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம், சந்திரபுரம், குருசிலாப்பட்டு அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.

    இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியில் மேளம் அடிக்க புறப்பட்டனர். 10 பேரும் மேள வாத்தியங்களுடன் ஒரே ஆட்டோவில் சென்றனர்.

    கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.

    இதில் திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18), சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    7 பேர் படுகாயமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டனர்.

    இதில் ஈசன் (20) அரவிந்தன் (20) என்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் இன்று காலை இறந்தார்.

    மேலும் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு அஜித், பெரியகரம் ஈஸ்வரன், அச்சமங்கலம் சஞ்சய், புத்தகரம் வேலு ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×