என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிட் காயின் திட்டத்தில் பல கோடி மோசடி புகார்: கிருஷ்ணகிரி, தருமபுரியில் 8 இடங்களில் போலீசார் சோதனை
    X
    கிருஷ்ணகிரி மாவட்டம் செட்டிபள்ளியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்ட பிட் காயின் ஏஜெண்டு வீடு.

    பிட் காயின் திட்டத்தில் பல கோடி மோசடி புகார்: கிருஷ்ணகிரி, தருமபுரியில் 8 இடங்களில் போலீசார் சோதனை

    • தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
    • பண மோசடி செய்த ஆறு பேரும் அவர்களுக்குள்ளாகவே மாறி, மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து நாடகமாடுகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில், 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் ஓசூர், கிருஷ்ணகிரி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேர் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி வருவதாகவும், டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி அவர்கள் நடத்தி வரும் 'யுனிவர் காயின்' நிறுவனத்தில், ரூ.7.70 லட்சம் முதலீடு செய்ய வைத்தனர்.

    அதில், சிறிதளவில் வருமானம் வந்தது. இதையறிந்து எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள், 60 பேர் 'யுனிவர் காயின்' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் சிறிதளவு பணம் லாபம் என்ற பெயரில் வாரா வாரம் கிடைத்தது.

    இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில், ஆப்பிள் ஐ-போன் பரிசு, கோவா, தாய்லாந்து, சுற்றுலா அதிகமாக ஆட்கள் சேர்ப்பவர்களுக்கு பிளாட், கார் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    மேலும், 'யுனிவர்காயின்' இணையதள பக்கத்தையும் ஏற்படுத்தி அதில் நமது பணம் குறித்த விவரங்கள் இருக்குமாறு செய்ததால் அதை நம்பி ஏராளமானோர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர்.

    அவர்களுக்கும் இரண்டு வாரம் மட்டும் பணத்தை கொடுத்து விட்டு பின்னர் பணம் எதுவும் கொடுக்காமல் இணையதளத்தை முடக்கி மோசடி செய்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட 210 பேர் சார்பாக நான் புகார் மனு அளித்துள்ளேன்.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இதே போல் ஏராளமானோரை ஏமாற்றி, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

    பண மோசடி செய்த ஆறு பேரும் அவர்களுக்குள்ளாகவே மாறி, மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து நாடகமாடுகிறார்கள்.

    இது குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை நடத்தி, விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ங்களில் இன்று காலை 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி. சிவகுமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் புகாருக்கு உள்ளான யுனிவர் காயின் நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகளில் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளியிலும், கிருஷ்ணகிரியில் ஓசூர், செட்டிபள்ளி, செரிகோணப்பள்ளி உள்பட 7 இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

    Next Story
    ×