search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை பரிசோதனை தீவிரம்
    X
    புளியரை சோதனை சாவடியில் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளித்த மருத்துவ குழுவினர்.

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை பரிசோதனை தீவிரம்

    • புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.
    • சமீப காலமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புளியரை வழியாக பெரும்பான்மையான வாகனங்களில் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது.

    செங்கோட்டை:

    கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தன. இந்த பீதியால் தமிழக-கேரள எல்லைகள் வழியாக வரும் வாகனங்களை பரிசோதித்து அவற்றுக்கு கிருமிநாசினி தெளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன. சமீப காலமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புளியரை வழியாக பெரும்பான்மையான வாகனங்களில் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது.

    இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணிக்க சோதனைச்சாவடியில் உரிய சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், கால்நடைத்துறையினர் சுழற்சி அடிப்படையில் அங்கு முகாமிட்டு பணியாற்ற வேண்டும் எனவும் கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று காலை புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமையில் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் முகாமிட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜ், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், கிருமிநாசினி தெளிப்பாளர்கள் 2 பேர் பணியில் உள்ளனர்.

    அவர்கள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவையும் தூவப்பட்டுள்ளன.

    Next Story
    ×