search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
    X

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

    • நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • இன்று 5-வது நாளாக கோழிப்பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி அளிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு மட்டும் தினசரி 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கிய விற்பனை மையமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி பகுதியில் வாத்துகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கேரளா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று 5-வது நாளாக கோழிப்பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி அளிக்கப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் முககவசம், கையுறை உள்ளிட்டவைகள் அணிந்து பணிபுரிகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரும் முட்டை அட்டைகளை கிருமிநாசினி தெளித்து அதன் பிறகு கோழிப்பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.

    கோழிப்பண்ணையாளர்கள் எக்காரணம் கொண்டும் முட்டை, தீவனம், தீவன மூலப்பொருட்கள், கோழிக்குஞ்சுகள், கோழி குப்பை போன்ற பொருட்களை அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கண்டிப்பாக கொள்முதல் செய்யக்கூடாது என்றும், கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×