என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி அருகே பெங்களூரு டிரைவர் கொலை: பிரபல ரவுடி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    தளி அருகே பெங்களூரு டிரைவர் கொலை: பிரபல ரவுடி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை

    • கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • புகார் மனுவை வாபஸ் பெற சொல்லி அந்த ரவுடி சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பின்னமங்கலம் அடுத்துள்ளது எலேசந்திரம் கிராமம். இங்குள்ள சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டதோகூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் என்பவரின் மகன் சாந்தகுமார் (வயது 30) என்றும், கார் டிரைவர் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தகுமார் கொல்லப்பட்டது குறித்து அவரது மனைவி சுஷ்மா மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொல்லப்பட்ட சாந்தகுமாரின் மனைவி சுஷ்மா பெங்களூரு போலீசில் கொடுத்த புகாரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொட்டதோகூர் பகுதியில் உள்ள மது பார் ஒன்றில் ரவுடி ஒருவருடன் சாந்தகுமாருக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதில் அந்த ரவுடி சாந்தகுமாரை தாக்கியதால் இது தொடர்பாக சாந்தகுமார் அந்த ரவுடி மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகார் மனுவை வாபஸ் பெற சொல்லி அந்த ரவுடி சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். முதலில் வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிய சாந்தகுமார் நேற்று முன்தினம் புகார் மனுவை பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வாபஸ் பெற்றார். இந்த நிலையில்தான் தளி அருகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு ரவுடி தான் சாந்தகுமாரை தனது கூட்டாளிகளுடன் கடத்தி சென்று கொலை செய்து உடலை போட்டு சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் சாந்தகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவை சேர்ந்த நேபாள்மஞ்சு என்ற ரவுடியையும்,அவனது கூட்டாளி ஒருவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×