என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் ஓட்டலுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்ற கரடி
    X

    ஊட்டியில் உணவகத்துக்குள் சுற்றிய கரடிகள்


    ஊட்டியில் ஓட்டலுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்ற கரடி

    • ஊட்டி உள்ள ஒரு உணவகத்துக்குள் 3 கரடிகள் புகுந்தன.
    • ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாகவே தொடா்ந்து கரடிகள் நடமாட்டம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒற்றை கரடி ஒன்று நகரின் பல இடங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது.

    கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் வனப் பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ஊட்டி நகரின் மையப்பகுதியான அக்ரஹாரம் பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் சந்தேகம் அடைந்த மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது கரடி ஒன்று நிற்பதை பார்த்ததும் பீதியடைந்தனா்.

    வனத்துறையினர் விரைந்து வந்து கரடியை அந்த பகுதியில் இருந்து விரட்டினர். ஆனால் கரடி வனத்திற்குள் செல்லாமல், அருகே உள்ள சலிவன் கோா்ட் ஹோட்டல் பகுதிக்கு சென்றது. அங்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி திரிந்த கரடி பின்னர் வனத்திற்குள் சென்றது.

    இந்த நிலையில் மீண்டும் நகருக்குள் கரடிகள் உலா வர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம், ஊட்டி இந்து நகரிலிருந்து தலைக்குந்தா செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்குள் 3 கரடிகள் புகுந்தன. பின்னர் உணவகத்துக்கு வெளியே கழிவுப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை தின்றுவிட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறி விட்டன.

    இந்த காட்சிகள் அனைத்தும், உணவகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களும் விரைந்து வந்து, காட்சிகளை பார்த்து விட்டு, கவனமாக இருக்குமாறு கூறி சென்றனர்.

    ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாகவே தொடா்ந்து கரடிகள் நடமாட்டம் காணப்படுவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×