என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரத்து குறைந்ததால் பீன்ஸ் கிலோ ரூ.120 ஆக அதிகரிப்பு
- வரத்து குறைவால் அவரைக்காய் மற்றும் இஞ்சி விலையும் அதிகரித்து உள்ளது.
- உற்பத்தி அதிகம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினசரி 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து குவிந்து வருகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தினசரி 70டன் வரை வந்து கொண்டிருந்த பீன்ஸ் தற்போது பாதியாக குறைந்து 40டன் அளவுக்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது இதனால் அதன் விலை அதிகரித்து உள்ளது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்கப்படுகிறது.
இதேபோல் வரத்து குறைவால் அவரைக்காய் மற்றும் இஞ்சி விலையும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
உற்பத்தி அதிகம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினசரி 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து குவிந்து வருகிறது.
இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.9 வரை விற்கப்பட்டு வருகிறது.






