என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை- பணியிட மாற்றம் காரணமா?
- கடந்த சில நாட்களுக்கு முன் முருகேசன் திடீரென ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- இதையடுத்து அவர் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவி, மகள் பள்ளிக்கு சென்ற பின்னர் முருகேசன் தனது தாயாரிடம் மாடிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை ஆயுதப்படை வளாகம் செயின்ட் பால்ஸ் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன் (வயது 52).
இவர் மூலக்கரைப்பட்டியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
மாரியம்மாள் மூன்றடைப்பில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகேசன் திடீரென ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவி, மகள் பள்ளிக்கு சென்ற பின்னர் முருகேசன் தனது தாயாரிடம் மாடிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
ஆனால் வெகுநேரமாக கீழே இறங்கி வராததால் முருகேசனின் தாயார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடீரென முதுகுளத்தூருக்கு இடமாற்றம் செய்ததால் முருகேசன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






