என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகம் - புதுச்சேரி போலீசாரால் தேடப்பட்டு வந்த கூலிப்படை தலைவன் பாம் ரவி கைது
- கொலை வழக்கில் தொடர்புடைய பாம் ரவி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
- சம்பவத்தில் தொடர்புடைய எழில்நிலவன் சமீபத்தில் ஜாமினில் வெளியான நிலையில் விக்கி சிறையிலேயே உள்ளார்.
கடலூர்:
நெய்வேலியில் பிரியாணி கடையை நடத்தி வந்தவர் கண்ணன்.
கடந்த 26-ந்தேதி இரவு நெய்வேலியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்கு வந்த 2 பேர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்ததுடன், கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவிய நிலையில் போலீசார் விக்கி மற்றும் எழில்நிலவன் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கண்ணன் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசாரிடம் கொடுத்ததால், மேலும் ஆத்திரமடைந்த விக்கி, கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எழில்நிலவன் சமீபத்தில் ஜாமினில் வெளியான நிலையில் விக்கி சிறையிலேயே உள்ளார். விக்கி சிறையில் இருந்தபடி கண்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதற்காக எழில் நிலவன் மூலமாக புதுச்சேரியில் உள்ள கூலிப்படை தலைவன் பாம் ரவி மூலம் இந்த கொலை நடைபெற்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாம் ரவி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் எழில் நிலவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம், புதுச்சேரி போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பாம் ரவி நெய்வேலி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் பாம் ரவியை பிடிப்பதற்கு அந்த பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்ற பாம் ரவியை போலீசார் பிடித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருந்த இடத்தை காட்ட பாம் ரவியை அழைத்துச் சென்றனர். அங்கிருந்தும் தப்பி ஓட முயன்று சுவர் ஏறி குதித்த பாம் ரவி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரசாந்தை போலீசார் பிடிப்பதற்கு சென்றனர். அவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது அவருடைய காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு பாம் ரவி மற்றும் பிரசாந்துக்கு காலில் கட்டு போட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சுபாசும் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






