search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே முட்டல் நீர்வீழ்ச்சியில் மூழ்கி கொத்தனார் பலி
    X

    ஆத்தூர் அருகே முட்டல் நீர்வீழ்ச்சியில் மூழ்கி கொத்தனார் பலி

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது.
    • பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி இருந்து வருகிறது.

    தற்போது கோடை விடுமுறையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை காண குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாழப்பாடி அருகே உள்ள வைத்தியகவுண்டன்புதூர் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் பிரவீன்குமார் (வயது 18) மற்றும் அத்தனூர்பட்டியை சேர்ந்த அவரது நண்பர்கள் 7 பேர் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர்.

    பிரவீன் குமார் நீச்சல் தெரியாததால் கரையின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு கரைக்கு வந்தனர்.

    கரையில் அமர்ந்திருந்த பிரவீன்குமார் நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் நீர்வீழ்ச்சி முன்பு உள்ள நீரோடை குட்டையில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாகியும் கரை திரும்பாததால் நண்பர்கள் அவரை தேடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் குட்டையில் இறங்கி பிரவீன்குமார் உடலை மீட்டு ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இறந்த பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    Next Story
    ×