என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி
- கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து ஒரு சுற்றுலா வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது.
- சுற்றுலா வேன் கவிழ்ந்து பஸ்சுக்காக காத்திருந்த மாணவர் கவிணேஷ் மீது விழுந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியா. இவர்களது மகன் கவிணேஷ் (12). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார்.
மாணவர் கவிணேஷ் தினமும் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வந்தார். வழக்கம்போல் இன்று காலையும் மாணவர் கவிணேஷ் பள்ளிக்கு புறப்பட்டு காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள வாய்க்கால் கரையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து ஒரு சுற்றுலா வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது. பஸ் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் வந்தபோது குறுக்கே மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.
அப்போது சுற்றுலா வேன் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய சுற்றுலா வேன் கவிழ்ந்து பஸ்சுக்காக காத்திருந்த மாணவர் கவிணேஷ் மீது விழுந்தது.
இதில் மாணவர் கவிணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






